பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த காரணத்தினால் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை சுண்ணாம்பு தெருவினை சேர்ந்தவர் செந்தில்(48),அவரது மனைவி வசந்தி(38).
இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 6வது முறை வசந்தி கர்ப்பம் தரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று(செப்.,10)அதிகாலை வசந்திக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
தனது கணவரின் வருமானம் போதாமல் குடும்பம் வறுமையிலுள்ள நிலையில் இந்த குழந்தையையும் வளர்த்து ஆளாக்குவது மிககடினம் என்று கருதிய வசந்தி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டதாக தெரிகிறது.
அதன்படி வசந்திக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் வாளிக்குள் வைத்து மூடி வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
க்ரைம்
அதிக ரத்த போக்கு காரணமாக உயிரிழந்த தாய்
இதற்கிடையே வசந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாகிக்கொண்டே போன நிலையில் அவர் தனக்கு மயக்கம் வருவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் உடனே வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் வசந்தி ஏற்கனவே அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரது உடலை எந்த தகவலும் மருத்துவமனையில் அளிக்காமல் அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இறந்த வசந்தி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.
வறுமை காரணமாக தாயே குழந்தையின் கழுத்தை கயிற்றால் அறுத்து கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், எது உண்மை என்பது பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தப்பின்னரே உறுதியாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.