Loading...
சோனியா, ராகுல், மம்தா நேரில் சந்தித்தும் மாறாத முடிவு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு உறுதி
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு உறுதி

சோனியா, ராகுல், மம்தா நேரில் சந்தித்தும் மாறாத முடிவு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு உறுதி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தில் நாளை நவம்பர் 30-ஆம் தேதி திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மசோதாவுக்கு திமுக அளித்துள்ள ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆகியோர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் திமுகவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

விளக்கம்

மசோதாவைத் தோற்கடித்தால் தமிழ்நாட்டிற்கான குறைந்தபட்ச பாதுகாப்பும் பறிபோகும் என விளக்கம்

ஆலோசனைக் கூட்டத்தில் தொடக்கத்திலிருந்தே திமுக முன்வைத்த கோரிக்கைகள் மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பதை இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் எடுத்துக் கூறியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர்கள் முன்வைத்த வேறு சில கருத்துக்களைத் தான் கேட்டுக்கொண்டாலும் தற்போது கொண்டு வரப்படும் மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கான குறைந்தபட்சப் பாதுகாப்பைக் கூட இழக்கும் சூழல்தான் ஏற்படும் என அவர் விளக்கினார்.

நியாயமான தொகுதி மறுவரையறை என்பதில் திமுக உறுதியாக இருப்பதால் மசோதா ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க முடியாது என அவர் கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வாழ்வா, சாவா போராட்டம்

தென் மாநிலக் கட்சிகளுக்கு வாழ்வா, சாவா போராட்டம்; இந்தியா கூட்டணியிடம் மாற்றுப் பதில் இல்லை

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு எந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை வந்தாலும் கண்டிப்பாகத் தமிழ்நாடு பாதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

மாநிலக் கட்சிகள் குறிப்பாகத் தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா சாவா போராட்டம் என்பதால் தற்போது கொண்டு வரப்படும் மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை என அவர் கூறினார்.

மேலும் இந்த மசோதாவை எதிர்த்துத் தோல்வியடையச் செய்தால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியிடம் மாற்று செயல்பாடு என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு அவர்களிடம் தெளிவான எந்தப் பதிலும் இல்லை எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

மு.க.ஸ்டாலின் உறுதி

அண்ணா, கலைஞர் வழியில் மாநில உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக என்பது பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இயக்கம் என்பதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின் அண்ணா தொடங்கி கலைஞர் தற்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை மாநில உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் சூளுரைத்தார்.

இதன் மூலம் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் நேரில் சந்திப்புக்குப் பிறகும் திமுகவின் முடிவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவைத் திமுக ஆதரித்து வாக்களிப்பது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT