சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி? 3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
செய்தி முன்னோட்டம்
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் கோளாறு (ARI) தொடர்பான பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளை அணுகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அதிகரிப்புக்குக் காற்று மாசுபாடே முக்கிய காரணியாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் உள்ள ஆறு முக்கிய மத்திய அரசு மருத்துவமனைகளின் (AIIMS, RML, Safdarjung உட்பட) தரவுகள் இந்த அபாயகரமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,04,758 ARI வழக்குகள் பதிவாகியுள்ளன.
காரணி
மாசுதான் முதன்மைக் காரணி
இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாபராவ் ஜாதவ், "மாசுபட்ட காற்றானது சுவாச நோய்களைத் தூண்டும் முக்கிய காரணியாக இருக்கிறது" என்று ஒப்புக்கொண்டார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிக்கும்போது, சுவாசக் கோளாறுகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப்போகிறது.
அச்சுறுத்தல்
கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்
இதேபோன்ற சுவாசக் கோளாறு வழக்குகள் சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களிலும் கடுமையான மாசுபாடு நாட்களில் பதிவாகியுள்ளன. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் போன்றோர் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தேசிய நோய் கட்டுப்பாடு மையம் (NCDC) நாடு முழுவதும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 230 கண்காணிப்பு மையங்களை அமைத்து வருகிறது. மேலும், ஆகஸ்ட் 2023 முதல் டிஜிட்டல் ARI கண்காணிப்பு முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டு, பெருநகரங்களின் காற்றின் தரம் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.