Loading...
நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராகும் சிஜேபி! டெல்லியில் 163 தடை உத்தரவு அதிரடி அமல்
டெல்லியில் 163 தடை உத்தரவு அமல்

நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராகும் சிஜேபி! டெல்லியில் 163 தடை உத்தரவு அதிரடி அமல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2026
09:18 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் பருவக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ள சலோ சன்சத் (நாடாளுமன்றம் நோக்கி செல்வோம்) முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டும், புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163ன் கீழ் (முன்பு சிஆர்பிசி 144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டத்திற்குச் சிஜேபி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

அனுமதி மறுப்பு

போராட்டம் நடத்தக் காவல்துறை அனுமதி மறுப்பு

இதுகுறித்து புதுடெல்லி பகுதி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த முற்றுகைப் பேரணி அல்லது போராட்டத்திற்கு எவ்வித அனுமதியும் கோரப்படவுமில்லை, காவல்துறை தரப்பில் அனுமதியும் வழங்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஜந்தர் மந்தர் பகுதியில் முன் அனுமதியுடன் நடத்தப்படும் போராட்டங்களைத் தவிர, புதுடெல்லி மாவட்டத்தின் பிற பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதோ, ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சட்ட நடவடிக்கை

விதிகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை

காவல்துறை பிறப்பித்துள்ள இந்தத் தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஒன்று கூடுபவர்கள் அல்லது பேரணி நடத்த முயல்பவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 223 மற்றும் பிற கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிரமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிபி எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் இந்தச் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு, அனுமதியற்ற பேரணிகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேண டெல்லி காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

பல அடுக்கு பாதுகாப்பு

டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்புப் படைகள்

முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் புதுடெல்லி, மத்திய டெல்லி மற்றும் வட டெல்லியின் பல முக்கியப் பகுதிகள் அசுரப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதிகளில் பல அடுக்குக் காவல், அதிநவீன கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மற்றும் 24 மணி நேரத் தீவிர ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

டெல்லிக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கக் கூடுதல் ரிசர்வ் போலீஸ் படைகளும், அதிரடிப் படைகளும் அவசர தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

முப்படை பாதுகாப்பு

ஜந்தர் மந்தர் பகுதியில் முப்படைப் பாதுகாப்பு

போராட்டங்களின் மையப் பகுதியான ஜந்தர் மந்தரில் அசாதாரண சூழல் நிலவுவதால், அங்கு மூன்று அடுக்கு அசுரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு அடுக்கு டெல்லி போலீசாரும், ஒரு அடுக்குத் துணை ராணுவப் படைகளும் அங்கு முழு நேரப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வீதி, சென்ட்ரல் விஸ்டா, கனாட் பிளேஸ் மற்றும் சங்கர் சவுக் போன்ற முக்கிய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அவசர சட்ட ஒழுங்குப் பிரச்சினையையும் எதிர்கொள்ள துரித அதிரடிப் படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சோனம் வாங்சுக்

மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் விடுத்துள்ள செய்தி

ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் தற்பொழுது பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை நேற்று திடீரென மோசமடைந்ததை அடுத்து, அவர் காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அங்குத் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக், நீட் முறைகேடுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஜூலை 20 நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT