டெல்லியில் எம்பிக்களுடன் தர்ணா போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜி கைது
செய்தி முன்னோட்டம்
தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவிற்கான தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. டெல்லி தெற்கு அவென்யூ பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் அனைவரையும் காவலில் எடுத்து சென்றனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
திரிணாமுல் எம்பிக்கள்
திரிணாமுல் எம்பிக்களும் காவலில் அடைப்பு
மம்தா பானர்ஜியுடன் சேர்த்துத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டெரெக் ஓ பிரையன், பிரதிமா மண்டல், டோலா சென், சமிருல் இஸ்லாம் மற்றும் சாகேத் கோகலே ஆகியோரையும் டெல்லி காவல்துறையினர் தடுத்து வைத்துக் கைது செய்தனர்.
காவல்துறையின் சிறை வாகனத்தில் ஏற்றப்பட்ட தங்களை சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நகரின் பல்வேறு வீதிகளில் சுற்றி அழைத்துச் செல்வதாகக் கைது செய்யப்பட்ட எம்பிக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகள்
தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள்
நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இது ஜனநாயகத்தின் நியாயமான தேர்தல் நடைமுறையைப் பாதிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் டெல்லியில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தடை
ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்லத் தடை
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த பெரிய அளவிலான போராட்டத்திற்கு செல்ல முயன்ற மம்தா பானர்ஜி தெற்கு அவென்யூ பகுதியிலேயே காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் அங்கேயே வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் நகரின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.