200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது
110 நாட்களாக 200 விமானங்களில் பயணித்து பல்வேறு பயணிகளின் கைப்பைகளில் இருந்து நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் கபூர், கடந்த ஆண்டில் 110 நாட்களுக்கு மேல் பயணம் செய்து குறைந்தது 200 விமானங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. IGI விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை துணை ஆணையர்(IGI) உஷா ரங்க்னானி, திருடப்பட்ட நகைகள் பஹர்கஞ்சில் இருந்து கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
கரோல் பாக்கில் மற்றொருவர் கைது
கரோல் பாக்கில் கைது செய்யப்பட்ட ஷரத் ஜெயின்(46) என்பவருக்கு அந்த நகைகளை விற்க ராஜேஷ் கபூர் திட்டமிட்டிருந்தார். கடந்த மூன்று மாதங்களில் தனித்தனி விமானங்களில் இரண்டு தனித்தனி திருட்டு வழக்குகள் பதிவாகின. அதன் பிறகு குற்றவாளிகளைப் பிடிக்க IGI விமான நிலையத்தில் ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டது என்று ரங்னானி கூறினார். கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்தார். பிப்ரவரி 2 ஆம் தேதி, அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட வந்தது. அந்த விசாரணையின் முடிவில் ராஜேஷ் கபூர் கைது செய்யப்பட்டார்.