ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?
சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.380 கோடியை அளிக்க வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிறுனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும், அந்நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்த உறுதிச்சான்றை நான்கு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டராக இருந்தவர் கலாநிதிமாறன். தனக்கும் தன்னுடைய கல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் கொடுக்க வேண்டிய கன்வர்டிபிள் வாரண்ட்ஸ் மற்றும் முன்னுரிமைப் பங்குகளை கொடுக்கத் தவறி, தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 2017-ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார் கலாநிதி மாறன். நீதிமன்றத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரூ.579.08 கோடியை அவருக்கு செலுத்தியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
மீண்டும் நீதிமன்றப் போராட்டம்:
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதிமாறனுக்கு அளித்த 579.08 கோடி என்பது அவருக்கு அளிக்கை வேண்டிய தொகையின் அசல் மட்டுமே. ஆனால், அதற்கான வட்டியை அந்நிறுவனம் கொடுக்கவில்லை என மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அக்டோபர் 2020-ல் ரூ.242 கோடியாக இருந்த வட்டித் தொகை, கடந்த பிப்ரவரி 2023-ல் ரூ.362 கோடியாகவும், தற்போது ரூ.380 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த வேண்டும் என தற்போது உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முன்பே கலாநிதிமாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனத்துடன் சுமூகமான தீர்வை தாங்கள் எட்டியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.