அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு
அவதூறான ட்வீட்கள் தொடர்பாக முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி 2021ஆம் ஆண்டு தொடுத்த அவதூறு வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி பெஞ்ச், இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரியிடம் ஒரு மாதத்திற்குள் மன்னிப்பு கேட்க கோகலேவுக்கு உத்தரவிட்டது. அவர் அவதூறு ட்வீட் போட்டதால், ட்விட்டரிலும் அவர் அதிகாரி பூரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கோகலேயின் ட்விட்டர் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஆறு மாதங்களுக்கு இருக்க வேண்டும்.
ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்த மத்திய அமைச்சரின் மனைவி
ஜூன் 2021 இல், கோகலே சுவிட்சர்லாந்தில் முன்னாள் தூதர் லக்ஷ்மி பூரி வாங்கிய ஒரு குறிப்பிட்ட சொத்தைப் பற்றி ட்வீட் செய்திருந்தார். தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி மற்றும் அவரது கணவரும் மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரியின் வருமான ஆதாரங்கள் குறித்து சமூக ஊடக தளத்தில் அவர் பல பதிவுகளை செய்திருந்தார். ட்விட்டரில் பதிவுகள் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, லக்ஷ்மி பூரி TMC தலைவருக்கு எதிராக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக "தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான, குற்றச்சாட்டுகளை டிஎம்சி தலைவர் வெளியிட்ட்டுள்ளதாகவும்", அந்த ட்வீட்களை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் அவர் கோரியிருந்தார்.