பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு
திமுக கட்சியின் சொத்து விவர பட்டியல் ஒன்றினை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை அண்மையில் வெளியிட்டார். யார் யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்னும் வீடியோவினை அவர் வெளியிட்ட நிலையில் அது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதற்கு திமுக'வினர் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, இவ்வாறு வீடியோ வெளியிட்டதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நோட்டீஸ் அனுப்பினர். மேலும் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியிருந்தார்.
8 வாரத்திற்கு பின்னர் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தற்போது அவதூறு வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். அதன்படி திமுக சொத்து பட்டியல் என்னும் பெயரில் அவதூறான கருத்தினை அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என்று சென்னை முதன்மை நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அந்த வழக்கில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை அவதூறான தகவல்களை வெளியிட்டு நற்பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முதல்வர் தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணையினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 8 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.