வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
குளிர்
வானிலை கணிப்பு
IMD கணிப்பின்படி தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால், விவசாயிகள் பொங்கல் அறுவடை மற்றும் இதர விவசாயப் பணிகளை இந்த இடைவெளியில் திட்டமிட்டு முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில், ஜனவரி 10 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், ஜனவரி 7-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். அதிகாலை நேரங்களில் லேசான மூடுபனி நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.