தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
தூக்கு தண்டனைக்கு வேதனை குறைவான மாற்று வழி இருக்கிறதா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மார் 21) தெரிவித்துள்ளது. மரண தண்டனை குற்றவாளிகளுக்கு வலியற்ற மரணத்தை வழங்க கோரும் மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த கோரிக்கை விடுத்துள்ளது. தூக்கு தண்டனையை விட குறைவான வலியுடைய மரண தண்டனை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதில் கிடைக்கும் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, தூக்கு மரணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
தூக்கு தண்டனை செயல்முறை "முற்றிலும் கொடூரமானது"
மேலும், இந்த விஷயத்தை விவாதிக்க நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது. தூக்கு தண்டனைக்கு பதிலாக துப்பாக்கிச் சூடு, விஷ ஊசி மற்றும் மின்சார நாற்காலி போன்றவைகளும் மனுவில் பரிந்துரைக்கபட்டிருந்தது. தூக்கு தண்டனை செயல்முறை "முற்றிலும் கொடூரமானது" என்று வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணைய அறிக்கையைப் படித்துக் கூறினார். "நமக்கு சில அறிவியல் தரவுகள் தேவை. தூக்கு தண்டனையால் ஏற்படும் வலி பற்றிய ஆய்வுகளை எங்களிடம் கொடுங்கள். நாம் இதற்கு ஒரு குழுவை கூட அமைக்கலாம். " என்று கூறிய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், அடுத்த விசாரணையை மே 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.