வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியும், மும்பை குண்டுவெடிப்பிற்கு காரணமான நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிமின் பரம்பரை சொத்துக்கள் நான்கு இன்று ஏலம் விடப்படவுள்ளது. அதுவும் வெறும் 19 லட்சத்திற்கு மட்டுமே ஏல விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிம் மும்பைக்கு வருவதற்கு முன்னர், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மும்பாகே என்ற கிராமத்தில் பிறந்தார். அந்த கிராமத்தில் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு வீடும், சில விளைநிலங்களும் தான் தற்போது ஏலம் விடப்படவுள்ளது. இந்த சொத்துக்களை வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள் பட்டியலில் சிவசேனாவின் முன்னாள் உறுப்பினர் அஜய் ஸ்ரீவத்சவாவும் ஒருவர். இவர் ஏற்கனவே 2020-இல் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான பங்களா ஒன்றை ஏலத்தில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனாதன தர்ம பாடசாலை அமைக்க திட்டம்
அந்த பங்களாவில், சனாதன தர்ம பாடசாலை அமைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜய் ஸ்ரீவத்சவா. தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை வாங்க எதற்காக அஜய் முனைப்பாக உள்ளார் என கேட்டதற்கு, அப்போது தான் மக்கள் மனதில், தாவூத் மீதுள்ள பயம் விலகும் என காரணம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ், மஹாராஷ்ட்ராவிலுள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் அத்தனையும் அரசு கைப்பற்றி உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், தாவூதிற்கு தொடர்புடைய பங்களா, ஹோட்டல் உட்பட 11 சொத்துக்கள் ஏலம் விட்டுள்ளது மகாராஷ்டிரா அரசு. அதில், நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல் ரூ.4.53 கோடிக்கும், ஆறு அபார்ட்மெண்டுகள் ரூ.3.53 கோடிக்கும், ஒரு விருந்தினர் மளிகை ரூ.3.52 கோடிக்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.