'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த புயல் அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகரும். இருப்பினும், இந்தியா, ஓமன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அரபிக்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் எந்த பெரிய தாக்கத்தையும் இது ஏற்படுத்தாது என்று கணிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பிப்பர்ஜாய் புயல், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் - கோவாவிற்கு மேற்கு-தென்மேற்கு திசையில் சுமார் 870 கிமீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 930 கிமீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
கர்நாடக கடலோர மீனவர்கள் அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை எச்சரிக்கை
இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல நிலைகள் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக, வரும் ஜூன் 12 ஆம் தேதி வரை இந்த அதிதீவிர புயல் வலிமையைத் தக்கவைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பிப்பர்ஜாய்' புயல், அதிதீவிர புயலாக தீவிரமடைந்து, குஜராத்தின் கடலோர மாவட்டமான போர்பந்தருக்கு தென்மேற்கே 1,060 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததால், குஜராத் அரசு "சாத்தியமான இயற்கை பேரிடர்களை சமாளிக்க தயாராக உள்ளோம்" என்று அறிவித்திருந்தது. அபாயகரமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை, கர்நாடக கடலோர மீனவர்கள், அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.