'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கோவாவில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 920 கிமீ தொலைவிலும், மும்பையில் இருந்து தென்-தென்மேற்கு திசையில் 1,120 கிமீ தொலைவிலும், போர்பந்தருக்கு தெற்கே 1,160 கிமீ தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு தெற்கே 1,520 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த புயலுக்கு வங்கதேச மொழியில் பிபர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருவமழை தொடங்கும் தேதியை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவிலை
இந்த புயல் உருவாகி கேரள கடற்கரையை நோக்கி வருவது பருவமழையை கடுமையாக பாதிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பருவமழை தொடங்கும் தேதியை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவிலை. ஜூன் 4ஆம் தேதி அன்று பருவமழை கேரளாவை எட்டும் என்று கடந்த மாதம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தனியார் வானிலை கண்காணிப்பு நிறுவனமான ஸ்கைமெட் வெதர், வரும் வியாழன் அல்லது வெள்ளியன்று பருவமழை கேரளாவை எட்டும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இதனால் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தாமதமாகத் தான் பருவமழை வரும் என்று கூறிவிட முடியாது.