5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; வானிலை மையம் அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் தெற்கு திசையில் நகர்ந்து, திங்கட்கிழமை (அக்டோபர் 26) காலை புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 27 அன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர் கனமழை பதிவாகி வருகின்றது.
ரெட் அலர்ட்
5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
புயல் நகர்வு காரணமாக அக்டோபர் 25 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
இங்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் இடி மின்னலும் வீச வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
மழை
நாளை அக்டோபர் 26 ஆம் தேதி மழை நீடிக்கும் மாவட்டங்கள்
திங்கட்கிழமை அன்று புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.