ஜூலை 15 முதல் நடைபெறுகிறது CUET-UG மறுதேர்வு
இந்தியா: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு இளங்கலை(CUET UG) 2024க்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. CUET UG 2024க்கான மறுதேர்வு ஜூலை 15 முதல் ஜூலை 19 வரை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. புகார் அளித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. கூடுதலாக, என்டிஏ இளங்கலை நுழைவுத் தேர்வுக்கான பதில் தாளை வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்கான முடிவுகள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒரு கேள்விக்கு 200 ரூபாய் என்ற விதத்தில் கட்டணம் செலுத்தி, ஜூலை 9, மாலை 5 மணி வரை தற்காலிக பதில் தாளுக்கு எதிராக ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.
தேர்வை சரியாக எழுத முடியவில்லை என மாணவர்கள் புகார்
"CUET UG க்கு நடத்தப்பட்ட தேர்வு தொடர்பாக பெறப்பட்ட பொதுக் குறைகளை NTA நிவர்த்தி செய்ய உள்ளது. புகார்கள் உண்மையானது என கண்டறியப்பட்டால், ஜூலை 15-19 தேதிகளுக்கு இடையில் எந்த நாளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இந்தத் தேர்வை மீண்டும் நடத்த NTA உறுதிபூண்டுள்ளது." என்று ஒரு மூத்த NTA அதிகாரி தெரிவித்திருந்தார். பெறப்பட்ட புகார்கள் குறித்து NTA அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், சில தேர்வு மையங்களில் நேர இழப்பு ஏற்பட்டதாகவும், தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு 261 மத்திய, மாநில, டீம்ட் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு(CUET) 13.4 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.