Page Loader
கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்து: Interlocking system இல்லாதது தான் காரணமா?
தெற்கு ரயில்வே விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்து: Interlocking system இல்லாதது தான் காரணமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2025
04:34 pm

செய்தி முன்னோட்டம்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தெற்கு ரயில்வே விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக ரயில் வருவதை டிரைவர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்தது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படவிருந்த நேரத்தில், பள்ளிக்கு நேரமானதால், ரயில் வருவதற்கும் சீக்கிரம் தண்டவாளத்தை கடந்து விடுவதாக வேன் டிரைவர் கோரிக்கை விடுத்தாகவும், அதனால் கேட்-ஐ கேட்கீப்பர் திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கேட் கீப்பரை இடைநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.

Interlocking system 

Interlocking system இல்லாதது தான் காரணமா?

தெற்கு ரயில்வே தொழிற்சங்க தலைவர் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் இருவரும் நிகழ்வுக்கான முக்கிய காரணங்களை வௌிப்படுத்தியுள்ளனர். ரயில்வே தொழிற்சங்க தலைவர் கூறுகையில்,"Interlocking system இல்லாததால் இந்த விபத்து நடந்தது. இந்த அமைப்பு இருந்திருந்தால், ரயில்வே கேட் திறந்திருந்தால் ரயில் செல்ல சிக்னல் கிடைக்காது. தற்போது இவ்வழித்தடத்தில் அந்த அமைப்பு இல்லாததால், கேட் திறந்த நிலையிலும் ரயில் சென்றது. நாடு முழுவதும் Interlocking அமைப்பை கொண்டு வர வேண்டியது அவசியம்," என தெரிவித்தார். திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகனும் இதையே வலியுறுத்தி,"வேன் ஓட்டுநர் வற்புறுத்தி கேட்டதையடுத்து, கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறந்தார். இது Non-Interlocking system வழித்தடமாகும். ரயில் அதே நேரத்தில் 95 கி.மீ. வேகத்தில் வந்தது," எனக்கூறினார்.

பாதுகாப்பு அமைப்பு

Interlocking system என்ன?

Interlocking என்பது, ரயில்வே சிக்னல் மற்றும் பாதைகள் ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்பு. இந்த அமைப்பு மூலம், ரயில்கள் ஒரே நேரத்தில் ஒறே பாதையில் செல்வதை தடுக்கும். கேட் மூடப்பட்டிருக்காவிட்டால் ரயில் தொடர்ந்து பயணிக்க சிக்னல் வராது என்பதே இதன் அடிப்படை. சம்பவம் நேர்ந்த இடத்தில் Interlocking system இல்லாதது, மேலும் மனித தவறுகள் இந்த விபத்திற்கு வழிவகுத்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு மற்றும் ரயில்வே தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன.