கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீது கத்தியால் தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 307, 506(II) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியரும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருமான டாக்டர் சேதுராஜன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
காலவரையற்ற போரட்டத்தை அறிவித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பின்னர் வாபஸ்
டாக்டர் பாலாஜி மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கும், மருத்துவமனைக்கும் இரு அடுக்கு பாதுகாப்பு, விபத்து பிரிவில் உள்ள மருத்துவர்களுக்கு துப்பாக்கி ஏந்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்து காலவரையற்ற போராட்டத்தில் இறங்கினர். எனினும் தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எதற்காக விக்னேஷ் மருத்துவரை தாக்கினார்?
தன்னுடைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று விக்னேஷ் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினார். குத்தி விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற போது, அங்கு இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையின் பின்னர், விக்னேஷை கைது செய்து, அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து விக்னேஷின் தாயார்,"என் மகன் செய்ததை சரி என்று சொல்லவில்லை. ஆனால், டாக்டர் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டுவார். நோட்டை தூக்கி வீசியடித்தார். நான் டாக்டரா, நீ டாக்டரா என்று அடிக்கடி கேட்பார். எனக்கே கடும் கோபம்தான். எனக்கு என்ன நோய் என்பதை சரியாக கூறாமல் என்ற கோபம் தான் என் மகனுக்கு" எனக்கூறியுள்ளார்.
மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம்
''அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொது மக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தி.மு.க., அரசு உள்ளது,'' என த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் கூறியுள்ளார். குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதல்வர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.