முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடி எட்டியிருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 29.7% அதிகமாகும். மேலும், இந்தியாவில் நிலுவையில் இருக்கும் மொத்த கடன் தொகையில் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகை மட்டும் 1.4%-ஆக இருக்கிறது. 14.1%-தத்துடன் வீட்டுக் கடன் முதலிடத்திலும், 3.7%-தத்துடன் வாகனக் கடன் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. தற்போது நிலுவையில் இருக்கும் கிரெடிட் கார்டு கடன் தொகையில், பாதுகாப்பில்லாத கடன் தொகை பெருகி வருவது குறித்து கடன் வழங்கும் நிறுவனங்களை எச்சரித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், அதன் அளவு குறைவாக இருப்பதால் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கவலையில் ரிசர்வ் வங்கி?
2008-ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பும் இதே போன்று நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டு கடனின் அளவு 1.2%-ஆக இருந்ததைக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், அப்போது இருந்து பொருளாதார மற்றும் மதிப்பீட்டு நிலைகளுக்கும் தற்போது இருக்கும் மதிப்பீட்டு நிலைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டையும், தற்போது அந்நிலை மேம்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றன வங்கிகள். தற்போது அதிகளவிலான கிரெடிட் கார்டு கடன் நிலுவையில் இருப்பது, கடனை திரும்ப செலுத்த முடியாததனால் அல்ல, கடன் பெருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தான். மேலும், டிஜிட்டல் முறையில் கடன் கொடுப்பதும் பெறுவதும் எளிதாகியிருப்பதால், வங்கிகளும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களுகுக் கடன் கொடுத்திருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.