பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது. பிரசவத்தின் இந்த நிலையில் கட்டாயப்படுத்தி குழந்தையை வெளியே எடுத்தாலும் அது உயிருடன் தான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்ததை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் ஆர்.வி.குகே மற்றும் ஒய்.ஜி.கோப்ரகடே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜூன் 20ஆம் தேதி அளித்த உத்தரவில், "வலுக்கட்டாயமாகப் பிரசவம் செய்தாலும் குழந்தை உயிருடன் தான் பிறக்கப் போகிறது என்றால், அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு அதை முழுமையாக வளர்ந்த பிறகு பிறக்க அனுமதிக்கலாம்." என்று தெரிவித்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு ஆணுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி
தனது மகளின் 28 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கக் கோரி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூன் 20ஆம் தேதி நீதிமன்றம் விசாரித்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மகள் காணாமல் போனதாகவும், மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு ஆணுடன் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது மனுவில் கூறியிருந்தார். சிறுமியை பரிசோதித்த மருத்துவ குழு, கர்ப்பத்தை கலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், குழந்தை உயிருடன் பிறக்கும் என்றும், புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும், இதனால் அந்த சிறுமியின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த கருக்கலைப்புக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.