கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் படி இந்த கூட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நியமிக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 கட்டணமில்லா எண்
மேலும், இதுகுறித்த புகார்களை பொதுமக்களிடம் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் மெத்தனால் மற்றும் எரிசாராயத்தின் பயன்பாட்டினை கண்காணித்து, மெத்தனாலை விஷ சாராயம் காய்ச்ச பயன்படுத்தாமல் இருப்பதினை உறுதி செய்யவேண்டும். அதே போல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கும் இதுகுறித்த புகார்களை தெரிவிக்கலாம். மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்னும் கட்டணமில்லா எண் மக்கள் பயன்பாட்டிற்காக இருப்பதினை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த கள்ளச்சாராய விவகாரம் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் முதல்வர் அலுவலகத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.