MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு
இந்தியா முழுவதும் மருத்துவத்துறை படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது. தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் இத்தேர்வினை 1.4 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதனையடுத்து இத்தேர்வின் முடிவானது கடந்த 13ம் தேதி வெளியானது. அதன்படி, நாடு முழுவதும் 11.46 லட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 3,892 ஆகியோர் உள்பட 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் வெளியானது. மேலும் கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு தேர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்,"நடப்பாண்டில் நீட் தேர்வினை 12,997 அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர். அதனுள், 30.67%மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். இது கடந்தாண்டினை விட 4% அதிகமாகும்" என்று கூறியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீடாக 7.5%இடம்
தொடர்ந்து பேசிய அவர்கள், "தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களுள் 600 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர் பெற்றுள்ளனர். அதேபோல், 501-600 மதிப்பெண்கள் வரை 23 பேரும், 400-500 வரை 127 பேரும், 300 மதிப்பெண்களில் இருந்து 400 வரை 437 பேரும், 201-300 வரை 651 பேரும், 107-200 வரை 2,741 மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். நீட் தேர்வானது அமல்படுத்தப்பட்ட நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீடாக 7.5%இடமானது ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது. வழக்கத்தை விட, இந்தாண்டு அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனடிப்படையில், 650க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என கூறியுள்ளார்கள்.