இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், இருமல் மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த மருந்துகளைச் சோதனையிட்டதில், அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமான அளவில் நச்சு இரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' போன்ற சிரப்களில் கலப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மருந்துக் கட்டுப்பாட்டு முறையை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
புதிய கட்டுப்பாடு
புதிய கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனி சில குறிப்பிட்ட இருமல் மற்றும் சளி மருந்துகள் மருத்துவரின் எழுத்துப்பூர்வமான பரிந்துரையின் பேரிலேயே மருத்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ற புதிய கட்டுப்பாட்டை மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், மருந்துக் கலப்படத்தைத் தடுத்து, இந்தியாவின் மருந்துத் துறையின் தரத்தை உறுதி செய்ய உதவும் என்று நம்பப்படுகிறது.