
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோரில் விபத்துக்குள்ளானது.
பாலசோர் அருகே வந்த போது, பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பலரும் காயம் அடைந்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீட்பு நடவடிக்கையில்ஈடுபட்டு, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர்.
Coramandel express
கோரமண்டல் விரைவு ரயிலின் இயக்கம் மீண்டும் துவக்கம்
இந்த விபத்தை அடுத்து, அந்த பாதையில் செல்லும் 90 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது ரயிலை இயக்குவதற்கு பாதை தயாராகியது.
51 மணி நேரத்திற்கு பிறகு, நேற்று இரவு சரக்கு ரயிலின் சேவை மட்டும் தொடங்கியது.
இந்நிலையில், இன்று காலை 10:45 மணிக்கு, விபத்திற்குள்ளான கோரமண்டல் ரயிலின் சேவை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் துவங்கியது.
எனினும், குறிப்பிட்ட நேரத்தை விட ரயில், 3 மணி நேரம் 45 நிமிட தாமதமாக தொடங்கப்பட்டது.
இன்று புறப்படும் இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ட்ரெயின், விபத்து நடைபெற்ற பாதை வழியாக கொல்கத்தாவை நாளை சென்றடைய உள்ளது.