விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர்
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் பெரும் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் தான் இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. "அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். கிரீன் சிக்னல் கிடைத்தது என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது. அதன் பிறகு, அவரது உடல்நிலை மோசமாகி, இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." என்று ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டிற்கான உறுப்பினர் ஜெய வர்மா கூறியுள்ளார். முதற்கட்ட விசாரணையின் படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஓட்டுநர்
கோரமண்டல் எக்ஸ்பிரஸின் லோகோ பைலட்டாக இருந்த ஜி.என்.மோஹன்ட்டி மற்றும் உதவி லோகோ பைலட்டாக இருந்த ஹஜாரி பெஹரா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். "பின்னால் இருந்து ஏதோ அசாதாரண சத்தம் கேட்பதாக யெஸ்வந்த்பூர் டிடி என்னிடம் கூறினார் . ஏதோ இடையூறு வருவதை அவர் உணர்ந்தார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. ஏ1 கோச்சுக்குப் பிறகு இரண்டு ஜெனரல் கோச்சுகளும் ஒரு கார்டு கோச்சும் இருந்தது. கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன" என்று ஜெய வர்மா கூறி இருக்கிறார். ஒடிசாவின் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் 270 பேர் பலியாகினர்.