LOADING...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 குற்றவாளிகளையும் சுட்டுப்பிடித்த காவல்துறை
மூன்று குற்றவாளிகளை போலீசார் காலில் சுட்டுபிடித்துள்ளனர்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 குற்றவாளிகளையும் சுட்டுப்பிடித்த காவல்துறை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2025
08:08 am

செய்தி முன்னோட்டம்

கோவை விமான நிலையம் அருகே ஞாயிறு இரவு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகளை, போலீசார் காலில் சுட்டுபிடித்துள்ளனர். அவர்கள் இப்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது நண்பரும் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தவசி, கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல், மாணவியின் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்த மாணவியை தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

கைது

போலீஸ் தேடுதல் நடவடிக்கையும் தொடர்ந்து கைதும்

இந்த குற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், 7 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சிறப்புப் படைகள் மூன்று குற்றவாளிகளையும் திங்கள்கிழமை அன்று ஒரு கோயில் அருகே சுற்றி வளைத்தனர். அப்போது, குற்றவாளிகள் அரிவாளைக் கொண்டு போலீசாரைத் தாக்கியதாகவும், இதில் தலைமை காவலர் சந்திரசேகர் இடது கை மணிக்கட்டு மற்றும் கையில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காப்புக்காகவும், குற்றவாளிகள் தப்பி செல்வதைத் தடுக்கவும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த தலைமை காவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி

குற்றவாளிகள் பின்னணி

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், கோவையில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தனர் என்றும், இவர்கள் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.