புஷ்பா 2 திரையரங்க விவகாரம்: 4 மணி நேரத்திற்கும் மேலாக அல்லு அர்ஜுனிடம் நீடித்த விசாரணை
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது புஷ்பா: தி ரைஸ் - பாகம் 2 படத்தின் ஸ்பெஷல் திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பல்லி காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டார். டிசம்பர் 4 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது எட்டு வயது மகன் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக காலை 11:00 மணியளவில் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் அல்லு அர்ஜுனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அல்லு அர்ஜூனுக்கு திங்கள்கிழமை போலீஸார் "நோட்டீஸ்" அனுப்பியுள்ளனர். இன்ஸ்பெக்டர் பி. ராஜு நாயக் கையெழுத்திட்ட நோட்டீஸில், சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவும், குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிடவும் அவர் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், "வழக்கு விசாரணையில் உள்ளது மற்றும் சம்பவம் குறித்து உங்களிடமிருந்து பதில்களைப் பெறுவதற்கு கீழே கையொப்பமிடப்பட்ட அதிகாரியின் முன் உங்கள் இருப்பு மிகவும் அவசியம்."
விசாரணையின் போது போலீசார் அவரிடம் கேட்ட கேள்விகளில் சிலவை
அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜரான பின்னர் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பாக, புஷ்பா 2 பிரீமியருக்கு வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது தெரியுமா? காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டாலும் (நடிகர் சிறப்புத் திரையிடலில் கலந்துகொள்வதற்காக) திட்டத்தைத் தொடரலாம் என்ற முடிவை எடுத்தது யார்? வெளியே கூட்ட நெரிசல் பற்றி எந்த காவல்துறை அதிகாரியாவது உங்களுக்குத் தெரிவித்தாரா? பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரியும்? உள்ளிட்ட முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் விசாரணைக்கு வரும் முன்னர் காவல்நிலையம் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்
முன்னதாக, டிசம்பர் 13ம் தேதி, இதே வழக்கில் அல்லு அர்ஜுனை சிக்கடப்பள்ளி போலீசார் கைது செய்தனர். அடுத்த நாள் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர் இரவு முழுவதும் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் தனது படத்தின் விளம்பர நிகழ்வின் போது நடந்த சோகமான சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில் நடிகர் இப்போது 11வது இடத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.