அரசியலமைப்பு தினம் 2024: இரண்டு மாதங்கள் தாமதமாக அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது ஏன்?
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் எனப்படும் சம்விதன் திவாஸை கொண்டாடி வருகிறது. ஆரம்பத்தில் இது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டது. எனினும், இந்த நாள் 2015 இல் மத்திய அரசால் அரசியலமைப்பு தினம் என மறுபெயரிடப்பட்டது. இந்தியா ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்த நாள் நாட்டின் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், அரசியல் நிர்ணய சபை வரைவுக்குழுவின் தலைவராக இருந்து டாக்டர் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பை நவம்பர் 26, 1949இல் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசியமலைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் உருவாக்கி முடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியமலைப்பு நடைமுறைக்கு கொண்டுவர 2 மாத தாமதம் ஏன்?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்திய அரசியமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சபை நவம்பர் 26, 1949இல் ஏற்றுக் கொண்டது. எனினும், இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வராமல், இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி 26, 1950 முதலே அமல்படுத்தப்பட்டது. முன்னதாக,1929 டிசம்பர் 31 அன்று, முழு சுதந்திரத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதன்படி 1930 ஜனவரி 26 அன்று ஜவஹர்லால் நேரு, தேசிய கொடியை ஏற்றி இந்தியாவிற்கு பிரிட்டிஷ் முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை நினைவுகூரும் வகையிலேயே, இந்திய அரசியமைப்புச் சட்டம் நவம்பர் 26, 1949இல் ஏற்றுக் கொண்டாலும், ஜனவரி 26'ஐ அதை அமல்படுத்துவதற்கான தினமாக தேர்வு செய்யப்பட்டது.