காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜனவரி 5) மாலை சோனியா காந்திக்கு திடீரென தீவிர இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் மார்பு நோய் நிபுணர்களின் (Chest Physician) நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கம்
மருத்துவமனை தரப்பு விளக்கம்
இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "சோனியா காந்திக்கு நீண்ட கால இருமல் (Chronic Cough) பிரச்சினை உள்ளது. தில்லியில் தற்போது நிலவி வரும் கடும் காற்று மாசு காரணமாக இந்தப் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது." "இது ஒரு வழக்கமான பரிசோதனைக்காக மேற்கொள்ளப்பட்ட அனுமதிதான். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது, யாரும் அச்சப்படத் தேவையில்லை." எனத்தெரிவித்தது. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மருத்துவமனையில் அவருடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.