ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர், முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 ஓட்டுகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இவருடன் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 ஓட்டுகள் மட்டுமே பெற்றிந்தார். இந்நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்த இளங்கோவன் அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என்று முன்பு கூறிய கருத்துக்கு பதில்
அவர் தமிழக முதல்வரை சந்திக்கும் போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பிற காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என்று முன்பு கூறிய கருத்து பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒவ்வொரு கூட்டணி ஏற்படும்போதும் அரசியல் சூழ்நிலை மாறும். அதற்கேற்ப கருத்துகளை சொல்வது இயல்புதான். ஒரு காலத்தில் தவறான கருத்தைச் சொன்னால் அதை திருத்திக்கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்" என்றார். மேலும், தென்னரசு பற்றிய பேசிய அவர், "தேர்தல் நியாயமாக நடந்தது என்று முன்பு கூறிய தென்னரசு, வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்தவுடன் எடப்பாடி-பழனிசாமி சொல்லிக்கொடுத்த மாதிரி குற்றம்சாட்டுகிறார்" என்றார்.