5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியை, விமானநிலையம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன்.,3ம் தேதி முதல் நூற்றாண்டு விழாவானது மாநிலம் முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், திமுக கட்சியின் ஒவ்வொரு அணியில் இருந்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தற்போது திமுக மகளிரணியின், மகளிர் உரிமை மாநாடு நாளை(அக்.,14) சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டினை திமுக துணை பொது செயலாளரான எம்.பி.கனிமொழி முன்னின்று நடத்தவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்பு
இந்த பிரம்மாண்ட மாநாடு, நாளை மாலை 4.30 மணியளவில் துவங்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. இதனிடையே இந்த மாநாட்டில், நாடு முழுவதுமுள்ள முக்கியமான மகளிர் தலைவர்களுக்கு எம்.பி.கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் அவரது அழைப்பினை ஏற்ற இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகளான பிரியங்கா காந்தியுடன் இன்று(அக்.,13) இரவு 10.40க்கு விமானம் மார்க்கமாக சென்னை வந்தடைகிறார் என்று கூறப்படுகிறது. அதன்படி, இவர்கள் இருவரும் கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வரும் சோனியா காந்தியை, நேரில் சென்று வரவேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு விமான நிலையம் செல்லவுள்ளார்.