ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவந்தனர். அதன்படி, 3ம்நாள் விவாதமான நேற்று(ஆகஸ்ட்.,10),மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இதுகுறித்து பேசியதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று மாலை இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், "எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாகவே நான் பார்க்கிறேன். மணிப்பூர் விவகாரம் குறித்து அமித்ஷா நேற்றே விரிவான விளக்கத்தினை அளித்துவிட்டார்" என்றும், "மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநிலஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதியளிக்கிறேன்" என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் அவர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என்றும் அறிவிக்கப்பட்டது.
75 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நடந்த இடைநீக்க நடவடிக்கை
இதனிடையே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பேசும்போது இடையில் இடையூறு அளித்தார், தேசத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அடிப்படையில்லா குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார் என பல குற்றங்களை எடுத்துரைத்து காங்கிரஸ் மக்களவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர், குரல் வாக்கெடுப்பு நடத்தி அவை நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்த விசாரணைக்காக சபையின் சிறப்புரிமை குழுவுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அக்குழு இதற்கான அறிக்கையினை அளிக்கும்வரை எம்.பி.இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. 75ஆண்டுகால வரலாற்றில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாம். இதனையடுத்து, இதுகுறித்து ஆலோசனை நடத்த நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி இன்று(ஆகஸ்ட்.,11)அழைப்பு விடுத்துள்ளார்.