
சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு
செய்தி முன்னோட்டம்
பால் புதுமையினரின் சுயமரியாதை மாதம் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் சுயமரியாதை மாதமாக கொண்டப்படுகிறது.
"தங்கள் பாலீர்ப்பு/பாலினம் அவமானகரமானது இல்லை, பெருமைக்குரியது" என்பதை பறைசாற்றும் விதமாக இந்த மாதம் முழுவதும் பல இடங்களில் பால்புதுமையினர் வானவில் சுயமரியாதை பேரணியை நடத்துவார்கள்.
இந்நிலையில், சுயமரியாதை மாதம் தொடங்கும் நாளான இன்று காங்கிரஸ் கட்சி, "அன்பு அனைவரையும் ஒன்றிணைக்கிறது! அன்பு, சமத்துவம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் பெருமைப்படுகிறோம்." என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
ஒரேபாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாடே காத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
DETAILS
ஒரேபாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் அரசும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது
ஒரே பாலின திருமணங்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் அதற்கு சாதகமாக தீர்ப்பளிக்க கூடாது என்றும் பாஜக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஒரே பாலின திருமணங்களுக்கு உரிமை கோரும் மனுக்கள், தேசத்தின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்களை" பிரதிபலிக்கின்றன என்றும் மத்திய அரசு விமர்சித்திருந்தது.
மேலும், ஒரேபாலின திருமணங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது பால் புதுமையினர் சமூகத்தின் வரவேற்பை பெற்றுள்ளது.