ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்
கடந்த 25ம்.,தேதி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பானது நேற்று(அக்.,27)நடந்துள்ளது. இதில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில்,'குற்றவாளி வினோத் வைத்திருந்த 4 பெட்ரோல் குண்டுகளில் 2 குண்டுகள் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து வீச முயற்சி செய்துள்ளார். அந்த குண்டுகள் ஆளுநர் மாளிகை அருகேயிருந்த பேரிகேட் மீது விழுந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை' என்று கூறியுள்ளார். அதேபோல் குற்றவாளி அங்கிருந்து தப்பித்து ஓடவும் இல்லை, ஆளுநர் மாளிகை பணியாளர்கள் அவரை பிடிக்கவும் இல்லை. சென்னை காவல்துறையை சேர்ந்த 5 காவலர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும் விளக்கமளித்துள்ளார்.
73 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்
இதனைத்தொடர்ந்து 'கடந்தாண்டு மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுகுறித்த புகாருக்கு காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை' என்று ராஜ்பவன் தெரிவித்திருந்தது. இதற்கு ஏடிஜிபி அருண் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர், 'இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவில் ஆளுநர் வாகனம் சென்ற பின்னர் பின்னே வந்த தனியார் வாகனம் மீது ஒரேயொரு கறுப்புக்கொடி விழும். இதுதான் உண்மை' என்றும், 'வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறு, ஏப்ரல் 19 நடந்த இந்த சம்பவத்தில் 73 பேர் கைது செய்யப்பட்டனர். 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என்று கூறி அதற்கான முதல் தகவல் அறிக்கையையும் காண்பித்தார். விரைவில் இதற்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏடிஜி அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.