
ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். ஆணவப் படுகொலைகள் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், ஒரு நாகரிக சமூகத்தில் இதுபோன்ற ஆதிக்க மனப்பான்மையால் நடக்கும் கொலைகளை ஏற்க முடியாது என்றும், இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில், சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது. உலகம் அறிவுமயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவதை சில சம்பவங்கள் தடுக்கின்றன. சில சம்பவங்கள் சமுதாயத்தைத் தலைகுனியச் செய்கின்றன"என்று வலியுறுத்தினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#Theekkathir | #HonorKilling | #TNAssembly pic.twitter.com/O1CuUR1AwW
— Theekkathir (@Theekkathir) October 17, 2025
அறிவிப்புகள்
ஆணையம் குறித்த முக்கிய அறிவிப்புகள்
ஜாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையத்தில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் மானுடவியல் அறிஞர்கள் இடம்பெறுவார்கள். இந்த ஆணையம் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று, உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார். முன்னதாக, சமூகங்களின் பெயரில் உள்ள 'ன்' விகுதியை நீக்கி 'ர்' என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரைச் சந்தித்தபோது தான் முன்வைத்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டார்.