சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்
கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார். இந்த நேரத்தில், பிரபல சமூக செயலியான டெலெக்ராமில், ஹோட்டல்களுக்கு ரெவியூ எழுதும் வேலை பற்றிய விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டிருந்த விவரங்களும், சலுகைகளும் இவரை ஈர்க்கவே, உடனே அந்த வேலைக்கு அப்ளை செய்துள்ளார் சுதா. சுதா பதிவிடும் ஒவ்வொரு ரெவியூவிற்கும் தகுந்தவாறு சம்பளம் என பேசப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த வேளையில் சேர்ந்துள்ளார் சுதா. ஆரம்பத்தில் பேசியபடி அவருக்கு சம்பளமும் கிடைத்துள்ளது. இதனால், அந்த கம்பெனி மீது சுதாவிற்கு நம்பிக்கை பிறந்தது.
ஒரே மாதத்தில், 15 லட்சத்திற்கும் மேல் சுருட்டல்
இந்த நிலையில், சுதாவிடம் அந்த மர்ம நபர், பண முதலீடு பற்றி பேசியுள்ளார். பணத்தை முதலீடு செய்வதால், அவருக்கு மேலும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், பணம் இரட்டிப்பாகும் என்பது போலவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய சுதா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை முதலீடு செய்ய துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர் 15 லட்சங்களுக்கும் மேல் முதலீடு செய்தும் பலன் இல்லாமல் போகவே, அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயற்சித்து உள்ளார். முதலீடு செய்த பணத்தை மீண்டும் பெறவும் முயற்சித்த போது தான், தான் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கில் முதலீடு செய்யவில்லை என்றும், ஒரு மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ள சுதா
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உடனே கோவை சரக சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொண்டுள்ளார். ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 11 வரை, தன்னிடம் அந்த மோசடி கும்பல்,ரூ.15,74,257 வரை ஏமாற்றியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அவரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குதல் தொடர்பானது) மற்றும் 66 டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி நபர் மூலம் மோசடி செய்ததற்கான தண்டனை தொடர்பானது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர், ஆன்லைனில் இது போன்ற மோசடி கும்பல்கள் நடமாட்டம் இருப்பதை பற்றி பலமுறை கூறியும், பல அப்பாவிகள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாக மாறியுள்ளது வருத்தத்திற்குரியது.