கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை
கோவை மாநகரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை இன்று(ஜன.,5) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. சமீபத்தில் கூட, கோவையில் உள்ள 9 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த குளங்களின் கரைகளில் வருகை தரும் மக்களுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
247 எழுத்துக்கள் கொண்டு செய்யப்பட்டுள்ள சிலை
சுமார் ரூ.1,000 கோடி செலவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து இப்பணிகளை செய்து வருகிறார்கள். அதன்படி, இப்பணிகளுள் ஒன்றாகவே பொள்ளாச்சி சாலையில் கிட்டத்தட்ட 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குறிச்சி குளக்கரை பகுதியில் 20 அடி உயரத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 டன் எடை கொண்ட இந்த திருவள்ளுவர் சிலை இரும்பால் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த திருவள்ளுவர் சிலையானது உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட 247 எழுத்துக்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளதாம்.
'அறம்' என்னும் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
இதுமட்டுமல்லாமல் வேறு சில சொற்கள் கொண்டும் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. மழை, வெயில் என எதிலும் இச்சிலை சேதமடையாமல், துரு பிடிக்காமல் உள்ள வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. திருவள்ளுவர் சிலையில் அவரது நெற்றியில் 'அறம்' என்னும் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இச்சிலை இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்தினை ஈர்க்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இச்சிலை இன்று தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறக்கப்படுகிறது. இதனையொட்டி, குளக்கரை பகுதிகளில் பராமரிக்கும் பணிகள் அனைத்தும் முழு வீச்சாக மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு செய்யப்படுகிறது.
குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள வேறு சில அம்சங்கள்
மேலும், இந்த குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள வேறு சில கலாச்சார சின்னங்கள், ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையம், நூலகம் மற்றும் பெரியகுளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மைய கட்டமைப்பு உள்ளிட்டவைகளும் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தினமும் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இந்த குளக்கரையில், 'செல்பி பாயிண்ட்', தமிழர்களின் மரபை பிரதிபலிக்கும் சிலைகள், ஜல்லிக்கட்டு காளை மற்றும் அதனை அடக்கும் வீரர்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரதம் ஆடும் பெண், சிலம்பம் ஆடும் தமிழ் வீரர்கள் உள்ளிட்ட சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.52.16 கோடி செலவில் குறிச்சி குளக்கரை சீரமைப்பு
ரூ.52.16 கோடி செலவில் இந்த குறிச்சி குளக்கரை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதன் 90% பணிகள் நிறைவடைந்து விட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாநகராட்சி கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம், வாலாங்குளம், குமாரசாமி குளம், செல்வாம்பதி குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட 9 குளங்களுக்குமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.