கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் தனது சிறுவயதில் இருந்தே வாகனங்களை ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர். அதனால், கடந்த மார்ச் மாதம், இவர் கோவை காந்திபுரத்திலிருந்து சோமானூர் செல்லும் தனியார் பேருந்தில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிய தொடங்கினார். கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால் இவருக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டு குவிந்தது. இந்நிலையில், இன்று(ஜூன்.,23)காலை திமுக பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஷர்மிளாவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து அவரது பேருந்திலேயே ஏறி பீளமேடுவரை ஷர்மிளாவுடன் உரையாடியப்படி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துநர் அன்னதாய் என்பவர் கனிமொழியிடம் பயணசீட்டு வாங்கும்படி அதிகாரத்தோரணையில் கேட்டார் என்று கூறப்படுகிறது.
ஆட்டோ கேப் ஓட்டி பிழைத்துக்கொள்வேன் - ஷர்மிளா
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அப்பெண் நடத்துநர் பேருந்து உரிமையாளரிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, ஷர்மிளா மற்றும் அவரது தந்தையினை அழைத்துப்பேசிய பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு, "உனது விளம்பரத்திற்காக அனைவரையும் அழைத்து வராதே. யார் பேருந்தில் ஏறினாலும் எனது நடத்துநர் அப்படித்தான் டிக்கெட் கேட்பார்" என்று கூறியுள்ளார். அதற்கு ஷர்மிளா தான் யாரையும் விளம்பரத்திற்காக பேருந்தில் ஏற்றவில்லை என்றும், கனிமொழி வருவது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் தான் தெரியும் என்றும் பதிலளித்துள்ளார். வாக்குவாதம் அதிகரித்ததையடுத்து, உரிமையாளர் துரைக்கண்ணு 'உனது பெண்ணை கூட்டிகிட்டு வெளியே போ' என்று கூறியுள்ளார். அவமானப்படுத்தப்பட்டு வெளியே வந்த ஷர்மிளா,"என்னால் பேருந்துத்தான் வாங்கமுடியாது. ஆனால் ஆட்டோ, கேப் போன்றவைகளை வாங்கமுடியும். அதனை ஓட்டி நான் பிழைத்துக்கொள்வேன்" என்று கூறியதாக கூறப்படுகிறது.