இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி
இந்தியா 78வது சுதந்திர தினத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 40 கோடி மக்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை தற்போது 140 கோடி மக்கள் நினைவுகூர்வதாக தெரிவித்தார். இந்நிலையில், சுதந்திரத்திற்கு போராடிய நம் முன்னோர்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு ஊர் மக்களுக்கு பிரிட்டிஷார் திமிர் வரி விதித்தது குறித்த சுவாரஸ்யமான தகவலை இதில் பார்க்கலாம். 1942இல் செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை கண்ணம்பாளையம் பகுதி மக்களுக்கு திமிர் வரி விதிக்கப்பட்டது.
பிரிட்டிஷாரின் திமிர் வரி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கீழ் கோவையில் ரயில் கவிழ்ப்பு, பிரிட்டிஷாரின் ஏரோ ட்ரோமை அழிப்பது என மிகப்பெரிய தொல்லை கொடுக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்கள் தலைமறைவான நிலையில், அவர்கள் குறித்து எந்த தகவலையும் மக்கள் தர மறுத்தனர். மக்களை கடுமையாக துன்புறுத்தியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்ததை வைத்து, திமிர் வரி என புதிதாக வரி போட்டு, அதை 48 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அதையும் செலுத்தாமல் திமிரோடு பிரிட்டிஷாரை எதிர்த்து அந்த பகுதி மக்கள் போராடினர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒற்றுமையுடன் நாட்டுக்காக போராடியதை அந்த பகுதி மக்கள் தற்போது நினைவுகூர்ந்து வருகின்றனர்.