
'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும் அதிகாரப்பூர்வ 'சலான்' குறுஞ்செய்திகளை போல, போலி செயலி வாயிலாக பொதுமக்களிடம் பணத்தை சூறையாடும் புதிய வகை சைபர் மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சமீப காலமாக, வாகன ஓட்டிகளின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு 'பரிவாஹன்' செயலியின் பெயரில் போலியான சலான் மற்றும் அபராதம் செலுத்தும் லிங்க் அனுப்பி, வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
விபரங்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களில் வாகனத்தின் புகைப்படம், விதிமீறிய இடம், நேரம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், உண்மையில் இது போலியான செயலியை நிறுவ வைக்க வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மோசடி முயற்சி என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
விவரங்கள்
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
பொதுமக்கள், போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை உள்ளிடும்போது, மோசடி நபர்கள் அவர்களது வங்கி கணக்கிலிருந்தே பணத்தை திருடி வருகின்றனர்.
இதுபோன்ற பல புகார்கள் தற்போது கோயம்புத்தூர் சைபர் கிரைம் பிரிவிற்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சைபர் போலீசார் முக்கிய எச்சரிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,
வாட்ஸ்ஆப்பில் வரும் பெயர் தெரியாத செயலிகளின் லிங்குகளை அணுகக்கூடாது
மோசடியான செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.
விதிமீறல் அபராதம் செலுத்த வேண்டுமெனில், அரசின் அதிகாரப்பூர்வ 'பரிவாஹன்' செயலியை (Play Store / App Store மூலம்) பயன்படுத்தவேண்டும்.
வங்கி விவரங்களைத் தரும் போது மிகுந்த சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மக்கள் எச்சரிக்கையாக இருந்து, தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.