சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை, சென்னை மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது நினைவிருக்கலாம். இன்று, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நேற்று இரவு கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள PSBB தனியார் பள்ளிக்கு, ஈமெயில் மூலமாக ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இரவும், இன்று காலையும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து, தேர்வு எழுத வந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும், காவல்துறையினர் பலத்த சோதனை செய்த பின்னரே பள்ளிக்குள் அனுமதித்தனர். அதோடு, பள்ளியை சுற்றி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும், ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போலி மிரட்டல் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மிரட்டல் விடப்பட்டது, பெற்றோர்களை கவலையுற செய்துள்ளது. மாணவர்களை அழைத்து செல்லுமாறு பெற்றோர்களுக்கு பள்ளி சார்பாக SMS விடப்படவே, பெற்றோர்கள் பள்ளிக்கு மீண்டும் விரைந்துள்ளனர். கடந்த மாதம் சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளுக்கு இதே போல ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை அனுப்பியது யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது அடுத்தடுத்து பள்ளிகளை குறி வைத்து ஈமெயில் வருவது சற்று கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது