
கோவையில் 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களை குறிவைத்து புதிய சைபர் மோசடி
செய்தி முன்னோட்டம்
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவரும் இந்நாளில், அதனை தீய நோக்கில் பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள், தற்போது 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களை குறிவைத்து புதுவித மோசடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் தொடர்பாக 2,800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதில் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.25 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான் கோவையில் பைக் டாக்ஸி ஓட்டுனர்களை குறிவைத்து நடைபெறும் ஒரு நூதன மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மோசடி
பைக் டாக்ஸி ஓட்டுனர்களை ஏமாற்றி மோசடி
பைக் டாக்ஸி செயலியில் ரைடு புக் செய்யும் மர்ம நபர்கள், ஓட்டுநர் பிக்-அப் இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதே, அருகிலுள்ள மருத்துவமனையில் உறவினருக்கு அவசரமாக பணம் தேவை எனக் கூறுகின்றனர். பின்னர், தங்களது 'Gpay' ஆப் வேலை செய்யவில்லை எனக் கூறி, பணத்தை ஓட்டுநரின் வங்கி கணக்கில் அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளரிடம் இருந்து வரும் போலி எஸ்எம்.எஸ் (SMS) குறுஞ்செய்தியை நம்பிய ஓட்டுநர்கள், பணம் அனுப்பிவிட்டதாக கருதி, அதே தொகையை கேஷாக மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். சில நேரங்களில், "பணம் அனுப்பியுள்ளேன், திருப்பி அனுப்பவும்" எனக் கூறி QR கோடு அனுப்பியும் பணம் பறிக்கப்படுகிறது. மோசடிக்காரர்கள் ₹2,000 முதல் ₹5,000 வரை மட்டுமே பணத்தை கோருவதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் எளிதாக நம்பி பணத்தை இழந்துள்ளனர்.
எச்சரிக்கை
கோவை போலீசாரின் எச்சரிக்கை
இந்த வகை மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கோவை மாநகர போலீசார் 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். பண பரிவர்த்தனையை SMS மூலம் மட்டுமே உறுதி செய்யாமல், வங்கி கணக்கை நேரடியாக சரிபார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பொது மக்களும், குறுஞ்செய்தி அல்லது 'Google Pay' இல் காட்டப்படும் வழிகாட்டி தகவல்களை மட்டும் நம்பாமல், வங்கி கணக்கை சரிபார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என போலீசார் வலியுறுத்துகின்றனர்.