கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று(மார்ச்.,23) கணவன் மனைவி இடையேயான பிரச்சனையின் காரணமாக மனைவி மீது கணவர் ஆசிட் ஊத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனையடுத்து வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வரும் அனைவரையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்த கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸிடமும் கூறப்பட்டதாக தெரிகிறது.
பாதுகாப்பு குறித்து கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்
இந்நிலையில் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல் படி, இன்று(மார்ச்.,24) கோவை நீதிமன்ற வளாகத்தின் 3 நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரை தவிர மற்ற பொது மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவரும் ஒரே நுழைவு வாயில் வழியாக மட்டுமே உள்ளே சென்று வெளியே வர அனுமதி. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.