கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மனைவி கவிதா(33). கடந்த 2016ம் ஆண்டு கவிதா பேருந்தில் பயணித்த 10 பவுன் தங்கநகையை திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். இவர் இதுகுறித்த வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். கணவர் மற்றும் தனது 2 குழந்தைகளை பிரிந்து வாழும் கவிதாவை சிவகுமார் நீதிமன்ற வளாகத்திற்குள் பின்தொடர்ந்து வந்து சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவர் மத்தியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டினை எடுத்து சிவகுமார் கவிதாவின் உடல் முழுவதும் பரவலாக ஊற்றியுள்ளார். இதில் அவரது உடல் மற்றும் ஆடைகளும் எரிந்துள்ளது.
நேரில் ஆய்வு செய்த துணை ஆணையர்
இதனை தடுக்க முயன்ற அருகில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டு சிறுசிறு காயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகுமாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் அடித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த கவிதா கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் சந்தீஸ், பிளாஸ்டிக் பாட்டிலில் ஆசிட்டினை மறைத்து வைத்து கொண்டு வந்ததால் அங்கிருந்தோருக்கு சந்தேகம் வரவில்லை. மேலும் இது கணவன் மனைவி இடையே உள்ள தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.