ஜந்தர் மந்தர் சீசன் 2': டெல்லியில் விரைவில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, விரைவில் 'ஜந்தர் மந்தர் சீசன் 2' போராட்டம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து நடத்தப்பட்ட தீவிரப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது கட்ட போராட்டம் அமையும். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தடை
தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு எழுந்த தடை
டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த அக்கட்சியின் தன்னார்வலர்கள் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கூட்டத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த மண்டபத்தின் உரிமையாளர்கள், ஆளும் பாஜக அரசின் அரசியல் நெருக்குதல் காரணமாகவே தங்களது அனுமதியை திரும்பப் பெற்றதாக அபிஜீத் தீப்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள வேறு சில அரங்குகளிலும் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மண்டப உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அக்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், அரசியல் அழுத்தங்களைக் கடந்து தங்களது ஜனநாயக போராட்டத்தை மேலும் தீவிரமாக முன்னெடுப்போம் என அக்கட்சி உறுதியளித்துள்ளது.
மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவுக்குக் காரணமாக அமைந்த முந்தைய போராட்டங்களின் தொடர்ச்சியாக, நாட்டின் கல்வி முறை சீர்திருத்தங்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி தொடர்ந்து அழுத்தக் குழுவாக செயல்படத் திட்டமிட்டுள்ளது.