Loading...
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் பிராந்தியக் கிளையை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தேவையான குடியிருப்புகள் மற்றும் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு முழுமையாக வழங்கும் என்று உறுதி அளித்துள்ள அவர், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வகையில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற இக்கிளை அவசியமானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசியம்

தென்னிந்திய மக்களுக்கான நீதிப் பகிர்வு

புதுடெல்லிக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான புவியியல் தொலைவு காரணமாக, பயணச் செலவுகளையும் வழக்குச் செலவுகளையும் தாங்க முடியாத சாமானிய மக்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்வுகள் எட்டாக்கனியாக இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் தொன்மையான சென்னை உயர் நீதிமன்றம் சிறந்த சட்ட அறிவும் வாதத்திறமையும் கொண்ட வழக்கறிஞர்களைக் கொண்டுள்ளது.

எனவே, சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைவது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதுடன், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது என்றும் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

சட்டம்

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 130

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130-ன் படி, தலைமை நீதிபதியின் முடிவு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் புதுடெல்லி தவிர்த்துப் பிற இடங்களிலும் உச்ச நீதிமன்ற அமர்வை அமைக்க வாய்ப்புள்ளது என்பதை முதல்வர் நினைவுபடுத்தியுள்ளார்.

1980-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதையும், தற்போது இது தொடர்பான வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வைத்துச் சாதகமான முடிவை எட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT