சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
இன்று, 'ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார். தமிழத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சாதனை புரிந்து வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் சாதனை புரிந்த சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர், வீரமுத்துவேல் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது, சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் திட்ட இயக்குனரும் தமிழரே. அதேபோல, இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களான சிவன், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே. விண்வெளி ஆராய்ச்சியில் தமிழ்நாட்டை பெருமை கொள்ள செய்த இந்த விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக அரசின் சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஞ்ஞானிகளுக்கு ₹25 லட்சம் பரிசுத்தொகை
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய முதல்வர்,"இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது" எனக்கூறினார். மேலும், இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார். மேலும், 7.5 % ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுள் ஆண்டுதோறும் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்போவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.