தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரான இமானுவேல் சேகரனுக்கு 66வது நினைவுநாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த மாநிலம் முழுவதிலுமிருந்து விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர் என்று கூறப்படுகிறது. பட்டியலினத்தினை சேர்ந்த பல அமைப்பினரும் ராமநாதபுரத்திற்கு வருகை தந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில், இம்மானுவேல் சேகரனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும் என்னும் அறிவிப்பினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், 1942ம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துக்கொண்ட இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகவும் பாடுபட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 பகுதிகளை பதற்றம் நிறைந்த பகுதிகளாக கருதப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.