5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று(ஜூன் 2) வெளியிட்டார். இந்த 5 வாக்குறுதிகளும் "சாதி மத பாகுபாடின்றி" நடப்பு நிதியாண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு நிறைவேற்ற இருக்கும் 5 வாக்குறுதிகள்: 1. க்ருஹ ஜோதி- அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். 2. க்ருஹ லக்ஷ்மி- குடும்ப தலைவிகளுக்கு 2,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை. 3. அன்ன பாக்யா- பிபிஎல் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ இலவச அரிசி. 4. யுவ நிதி- வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு 3,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை 5. சக்தி- பொது போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம்
க்ருஹ லட்சுமி திட்டத்திற்கு, பெண்கள் தங்கள் ஆதார் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு எண்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணப்பித்த பெண்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை டெபாசிட் செய்யப்படும். அனைத்து பிபிஎல் மற்றும் அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கும் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் ஜூலை 1 முதல் 10 கிலோ அரிசி வழங்கப்படும். க்ருஹ சக்தி திட்டம் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கப்படும். இதன் கீழ் அனைத்து பெண்களும் ஏசி பேருந்துகள் மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பேருந்துகள் தவிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம்.