முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்ய போகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் வேலூர் மண்டலத்தில் கள ஆய்வு செய்ய உள்ளார். முதல் நாள், நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பின் சுருக்கம்
வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்ய இருக்கிறார். முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகிய அதிகாரிகள் முதலமைச்சருடன் கலந்து கொள்வார்கள். நிர்வாகப் பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், இளைஞர் திறன் மேம்பாடு, சாலை மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்றவை எப்படி இயங்கி வருகிறது என்பதை முதலமைச்சர் ஆய்வு செய்ய இருக்கிறார். முதல் நாள், அந்த பகுதி அமைப்புகளிடம் கருத்துக்களும், கோரிக்கைகளும் கேட்கப்படும். இரண்டாவது நாள், அதை பற்றி மாவட்ட ஆட்சியருடன் விவாதிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.